பயங்கரவாத தடுப்பு காவல்துறையினால் கைது செய்யப்பட்டு, வவுனியாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள யாழ்ப்பாண மாநகர முதல்வர் மணிவண்ணனை சந்திப்பதற்கு சட்டத்தரணிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு தொடக்கம் இன்று அதிகாலை வரை யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்ட பின்னர், யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
அவரை உடனடியாக, பயங்கரவாத தடுப்பு காவல்துறையினர், வவுனியாவுக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இந்தநிலையில், கைது செய்யப்பட்ட மணிவண்ணனை பார்வையிட பத்துக்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் இன்று காலையில் இருந்து வவுனியா சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் அலுவலகத்தில் கூடியுள்ளனர்.
எனினும், மாநகர முதல்வர் மணிவண்ணனை சந்திப்பதற்கு சிறிலங்கா காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை.
இதனால் சட்டத்தரணிகள் அங்கு காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் காவல்துறையை ஒத்த சீருடையை அணிவதற்கு ஐந்து பேரை அனுமதித்த குற்றச்சாட்டிலேயே, யாழ்ப்பாண மாநகர முதல்வர் மணிவண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் அஜித் றோகண, தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான குற்றச் செயல் தொடர்பாகவே, அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், யாழ். நகரில் காவல்துறையின் கடமைகளை ஆற்றுவதற்கு, ஐந்து பேரை, அவர் ஈடுபடுத்தியிருந்தார் என்றும் சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகளையோ அவர்களின் கொள்கைகளையோ ஊக்குவிப்பது தடை செய்யப்பட்டுள்ளதாகவும், அஜித் றோகண மேலும் கூறியுள்ளார்.