வடக்கு மாகாணத்தில் மேலும் எட்டுப் பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறிப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் ஏழு பேருக்கும் கிளிநொச்சியில் ஒருவருக்குமே தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
யாழ். போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில் 352 பேரின் மாதிரிகள் நேற்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, யாழ். போதனா மருத்துவமனை தனிமைப்படுத்தல் விடுதியில் இருந்த நால்வருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள மூவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதேவேளை, கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளார்.
கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய மூதாட்டியே கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர் என்று இனங்காணப்பட்டுள்ளார்.
இதையடுத்து, யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.