கிளிநொச்சி- உருத்திரபுரம், உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என்று நேற்று நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
உருத்திரபுரீஸ்ரர் ஆலய வளாகத்தில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு, தொல்பொருள் திணைக்களம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல் நேற்று மாலை நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிறிதரன் ஆகியோர் தலைமையில் ஆலய வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதில், கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர், உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பசுபதிப்பிள்ளை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
உருத்திரபுரீஸ்ரர் ஆலய வளாகத்தில் அகழ்வுப் பணிகளை முன்னெடுத்து, அப்பகுதியில் பௌத்த விகாரை அமைக்க நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சிக்கலாம் என்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.