கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்களை சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
சிறிலங்கா வெளியுறவு அமைச்சில் நடந்த இந்தச் சந்திப்பின் போது, அரசியலமைப்பு மறுசீரமைப்பு முயற்சிகள், ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள், நல்லிணக்கப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவதுடன் தொடர்புடைய முன்னேற்றங்கள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்களுக்கு தினேஷ் குணவர்த்தன விளக்கமளித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளின் தூதுவர்களும், ருமேனியாவின் பதில் தூதுவரும், ஜேர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் பிரதி தூதுவர்களும், பங்கேற்றுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் அனுசரணையுடன், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அதேவேளை, அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்சும், சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
நேற்று முன்தினம் வெளியுறவு அமைச்சில் நடந்த இந்தச் சந்திப்பின் போது, பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும், ஜெனிவா தீர்மானத்துக்கு பின்னரான நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.