கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த திருநெல்வேலி பொதுச்சந்தை மற்றும் கடைத் தொகுதி என்பன, இன்று மீளத் திறக்கப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று பரவலை அடுத்து, திருநெல்வேலி பொதுச் சந்தை, கடைத் தொகுதி ஆகியன இரண்டு வாரங்களாக மூடப்பட்டு, வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
அவர்களிடம் இரண்டு முறை பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களின் வர்த்தக நிலையங்கள் தவிர்ந்த ஏனையவற்றை இன்று முதல் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளாதவர்களின் வர்த்தக நிலையங்களைத் திறக்க அனுமதிக்கப்படவில்லை.
அதேவேளை, திருநெல்வேலி, பாற்பண்ணை கிராமத்தில், பாரதிபுரம் தவிர்ந்த ஏனைய பகுதிகள், கண்காணிப்பு வலயத்தில் இருந்து விடுவிக்கப்பட்டவுள்ளன.
திருநெல்வேலி சந்தை மற்றும் வர்த்தக நிலையங்களில் பெருமளவு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, பாற்பண்ணை கிராமம் முடக்கப்பட்டு, கண்காணிப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
கண்காணிப்பு வலயம், 14 நாள்களாக நடைமுறையில் உள்ள நிலையில், அங்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் பாரதிபுரம் பகுதியில் 88 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து, பாரதிபுரம் தவிர்ந்த ஏனைய பகுதிகள் நாளை காலை 6 மணிக்கு, கண்காணிப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்படும் என்று, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.