சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் 11 பங்காளிக் கட்சிகள் தனியாக மேதின நிகழ்வுகளை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளன.
கடந்த வியாழக்கிழமை 11 கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்ட கூட்டம் ஒன்றில் இதுகுறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, தயாசிறி ஜயசேகர, அதுரலியே ரத்தன தேரர், கெவிந்து குமாரதுங்க, அதாவுல்லா, டியூ குணசேகர, அசான நவரத்ன, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, ரிரான் அலஸ் ஆகியோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான சிறிலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் சார்பில் மேதினப் பேரணிக்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ள நிலையில், 11 கட்சிகள் இந்த முடிவை எடுத்துள்ளன.
எனினும், தனியான மேதினப் பேரணியை நடத்தும் இந்த முடிவுக்கான காரணம் வெளிப்படுத்தப்படவில்லை.
சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச முழங்காலில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டுள்ள நிலையில், அவர் உடல் நிலை கருதி, அரசியல் விவகாரங்களில் தலையீடுகளை குறைத்துக் கொண்டுள்ளார் என்றும், இதனால், பொதுஜன பெரமுனவுக்குள் முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.
குறிப்பாக பசில் ராஜபக்சவுக்கு எதிராக ஏனைய பங்காளிக் கட்சிகள் எதிர்ப்பை வெளிப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன் விளைவாகவே மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாக, பசில் ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பல முன்மொழிவுகளை பங்காளிக் கட்சிகள் நிராகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.