அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜனநாயகத்தில் அர்ப்பணிப்பு கொண்டுள்ளார் என்று சிறிலங்கா அரசாங்கத்துக்கு அமெரிக்கா எடுத்துக் கூறியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவைச் சந்தித்து, அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற ஜோ பைடன், மனித உரிமைகள் உள்ளிட்ட விடயங்களில் தமது புதிய கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறார்.
இதன்போது, ஜனநாயகத்துக்கான ஜோ பைடனின் அர்ப்பணிப்பு குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க தூதரக பேச்சாளர் நான்சி வன்ஹோர்ன் தெரிவித்துள்ளார்.
இதன்போது, தொற்றுநோய் தொடக்கம் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஆட்சி முறையின் ஜனநாயக பண்புகளை நிலைநாட்டி சட்டத்தின் ஆட்சியை மதிப்பதோடு தமிழ் பேசும் சமூகங்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும், தமிழ் பேசும் சமூகங்களை பழிவாங்கும் நடவடிக்கைகள் உடன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர், தெற்காசியாவின் மிகப் பழைய ஜனநாயக தேசத்தின் ஜனநாயக நண்பன் என்ற வகையில் அமெரிக்கா இதனை எதிர்பார்க்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்