ஈரானில், நதன்ஸ் (Natanz) நகரிலுள்ள, யுரேனியம் செறிவூட்டும் மையத்தில், நேற்று பாரிய வெடிவிபத்து இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து அணுஆலையின் ஒரு பகுதி தீ பிடித்து எரிந்ததுடன், இந்த வெடி விபத்தினால், மையத்துக்கான மின் வினியோகமும் தடைப்பட்டுள்ளது,
எனினும் இந்த விபத்தில் மையத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என ஈரான் அணுசக்தி திட்டத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அங்கு பெரியளவில் பொருள் சேதம் ஏற்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
வெடி விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவராத நிலையில் இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அந்தப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்தச் சம்பவம் ஒரு தீவிரவாத தாக்குதல் என்று கூறப்படுகின்ற நிலையில், இது இஸ்ரேலின் இணையவெளி தாக்குதலின் விளைவு என்று, இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகள் வியன்னாவில் பேச்சுவார்த்தை நடந்தி வரும் சூழலில் இந்த விபத்து நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.