கூலிக்கு அமர்த்தப்பட்ட சஹ்ரான் குழு எமது சமூகத்தின் செயற்பாட்டினால் தான் உருவானது என்பதை சகலரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
மருதமுனையைச் சேர்ந்த மர்ஹூம் ஐ.எம்.எஸ்.எம். பழீல் மௌலானாவினது வாழ்வும் பணியும் நூல் மருதமுனை, பொது நூலக கேட்போர் கூடத்தில் வெளியிடப்பட்ட போது,பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எமது உள்விவகாரங்களை பற்றி பேச வேண்டும்.எமது உள்விவகாரங்களில் உள்ள விமர்சனங்களை பற்றி பேசப்போனால் எத்தனை மணித்தியாலம் எடுக்குமோ என்று தெரியாது.
அந்தளவுக்கு எங்களுக்கு மத்தியில் உள்விவகாரங்கள் ஏராளமாக இருக்கிறது.ஏராளமான உள்முரண்பாடுகளுடன் நாங்கள் வாழ்ந்து வருகின்றோம்.
புரிந்துணர்வும் சகிப்பு தன்மையும் எம்மிடையே இல்லாமல் போவதை காண்கின்றோம்.கூலிக்கு அமர்த்தப்பட்ட சஹ்ரான் குழு எமது சமூகத்தின் செயற்பாட்டினால் தான் உருவானது என்பதை சகலரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறாக ஒரு கும்பல் செய்த செயலையே இந்த நாடு இன்றும் பேசிக்கொண்டிருக்கின்றது என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.