தற்போதைய கொரோனா அலை உச்சத்தை நெருங்கியுள்ளதாக, கனடாவின் தலைமை சுகாதார அதிகாரி மருத்துவர் தெரெசா டாம் (Theresa Tam) தெரிவித்துள்ளார்.
கனடாவின் இரண்டாவது அலையின் உச்சக் கட்டம் இது என்று குறிப்பிட்டுள்ள அவர், கடந்த ஏழு நாட்களில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை, முந்திய வாரத்தை விட 23 சத வீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் 18 தொடக்கம் 39 வயதுக்கு இடைப்பட்டவர்கள் அதிகளவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த ஜனவரி தொடக்கம் மார்ச் வரையான காலப்பகுதியில், இந்த வயதுப் பிரிவினரில், 7.4 வீதமானோரே தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர் என்றும், தற்போது அது 15 வீதமாக அதிகரித்துள்ளதாகவும், மருத்துவர் தெரெசா டாம் தெரிவித்துள்ளார்.
இந்தச் சூழலில், கடுமையான பொது சுகாதார விதிமுறைகள், மற்றும் தனிநபர் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.