ஈரானின் முக்கியமான அணுசக்தி உற்பத்தி தளத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் அணுசக்தி பொருட்களை சுத்திகரிக்க பயன்படுத்தப்படும் ஆயிரக்கணக்கான இயந்திரங்கள் அழிக்கப்பட்டுள்ளன அல்லது சேதமடைந்துள்ளன என்று ஈரானிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள ஈரானிய நாடாளுமன்ற ஆய்வு நிலையத்தின் தலைவரான அலிரெசா சகானி, (Alireza Zakani,)இந்தச் சம்பவம், ஈரானின் அணுசக்தி செயல்முறையை செயற்படுத்தும் திறனை இல்லாமல் செய்துள்ளது என்று கூறியுள்ளார்.
அதேவேளை, இந்த தாக்குதல் நிலத்துக்கு அடியில் 50 மீற்றர் ஆழத்தில் உள்ள பகுதியிலேயே நடத்தப்பட்டதாக மற்றொரு ஈரானிய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதலை அணுசக்தி தீவிரவாதம் என்று ஈரான் குற்றம்சாட்டியிருந்தது.
புலனாய்வுத்துறையை ஆதாரம் காட்டி இஸ்ரேலிய வானொலி வெளியிட்டுள்ள செய்தியில், இது மொசாட்டின் இணைய நடவடிக்கை என்று கூறிய போதும், இஸ்ரேல் இந்த தாக்குதலில் ஈடுபட்டதை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, பாரிய வெடிப்பினால், நிலத்துக்கடியில் உள்ள அணுசக்தி கட்டமைப்பின் உள்ளக மின் விநியோகப் பொறிமுறை முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை மீளமைக்க 9 மாதங்கள் எடுக்கக் கூடும்,என்றும் நியூயோர்க் ரைம்சிடம் தகவல் வெளியிட்டுள்ள அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள், தெரிவித்துள்ளனர்.