மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள, சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக மக்னிட்ஸ்கி தடைகளை விதிக்க வேண்டும் என்று, சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் பிரித்தானிய அரசிடம் கோரியுள்ளது.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தொடர்பிலான ஐம்பது பக்க ஆவணம் ஒன்றை தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம், பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அபிவிருத்தி பணியகத்தின் தடைகள் திணைக்களத்திடம் சமர்ப்பித்துள்ளது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா, சிறிலங்காவின் உள்நாட்டு போரின் இறுதிக்கட்டம் தொடர்பாக, தங்களிடம் பெருமளவு ஆதாரங்கள் உள்ளன என்று, தெரிவித்துள்ளார்.
மிகவும் நுணுக்கமான முறையில் சர்வதேச சட்டத்தரணிகள் மற்றும் வழக்கு தொடுநர்களினால் சேகரிக்கப்பட்ட இந்த ஆதாரங்களில், பிரித்தானியாவில் தற்போது வசிக்கும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கண்ணால் கண்டவர்களின் வாக்குமூலங்களும் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“போரின் முடிவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் மீறல்களில் ஜெனரல் சவேந்திர சில்வா மீதுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக, 2020இல் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் பயணத் தடையை விதித்துள்ளது.
இவ்வாறான தடையை பிரித்தானியாவும் விதிப்பதற்கு இதுவே சரியான தருணமாகும்.
பிரித்தானியாவின் தடை பொறுப்புக்கூறல் தொடர்பில் இன்னொரு முக்கியமான நடவடிக்கையாகவும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் பிரித்தானியா முக்கிய பங்கு வகித்ததன் அடிப்படையிலானதாகவும் இருக்கும். சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் சமர்ப்பித்துள்ள ஆதாரங்களில் பாரிய மனித உரிமைமீறல்கள் இழைக்கப்படுவதில் ஜெனரல் சவேந்திர சில்வாவின் பங்களிப்பு குறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.” என்றும் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்