சிங்கள – தமிழ் புத்தாண்டுக்குப் பின்னர், கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், ஆனால், அது மூன்றாவது அலையாக இருக்காது என்று தலைமை தொற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
“கடந்த ஆண்டு டிசெம்பரில் கிறிஸ்மஸ் பண்டிகைக்குப் பின்னர், தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால் அது புதிய அலையாக உருவாகவில்லை.
கிறிஸ்மஸ் காலத்தில் மக்களின் அதிகரித்த நடமாட்டங்களால் புதிய கொத்தணிகள் உருவாகின.
அதுபோன்ற நிலையை, சிங்கள- தமிழ் புத்தாண்டுக்குப் பின்னரும் எதிர்பார்க்கலாம்.
சுகாதார வழிமுறைகள் மீறப்படும் சம்பவங்கள் பெருமளவில் இடம்பெறுகின்றன.
யாழ்ப்பாணத்தில் தற்போது அதிகளவு தொற்றுகள் பதிவாகின்றன. எனினும் பெரும்பாலானவர்கள் தனிமைப்படுத்தலில் உள்ள நிலையிலேயே கண்டுபிடிக்கப்படுகின்றனர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.