சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெங்கி (Wei Fenghe) இந்த மாத இறுதியில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றன.
சிறிலங்கா அரசாங்க மற்றும் பாதுகாப்பு உயர்மட்டங்களுடன் பேச்சுக்களை நடத்துவதற்கே சீனப் பாதுகாப்பு அமைச்சர் கொழும்புக்கு செல்லவுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் இரண்டாவது அதி உயர் மட்ட சீன தலைவராக, ஜெனரல் வெய் பெங்கி (Wei Fenghe) இருப்பார் என்றும் கூறப்படுகிறது.
ஜெனரல் வெய் பெங்கி (Wei Fenghe) யின் பயணத் திகதி இன்னமும் அறிவிக்கப்படாத போதும், சிங்கள- தமிழ் புத்தாண்டுக்குப் பின்னர் அவரது பயணம் இடம்பெறும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தப் பயணத்தின் போது சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெங்கி (Wei Fenghe) , சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச போன்ற அரசாங்கத்தின் உயர்மட்டத் தலைவர்களைச் சந்தித்து பேசவுள்ளார்.
அத்துடன் ஏனைய அரச உயர் அதிகாரிகள், பாதுகாப்பு உயர் அதிகாரிகளையும் அவர் சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சீன ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று அடுத்த மாதம் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.