நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியமை, ஆயுதங்களை விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 11 சந்தேகநபர்களும், கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தினால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஶ்ரீராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது, சந்தேக நபர்கள் 11 பேரையும் விடுதலை செய்வதாக நீதிவான் அறிவித்தார்.
தமிழீழ விடுதலை புலிகளால், போர்க் காலத்தில் வடக்கு, கிழக்கில் புதைக்கப்பட்டிருந்த கிளைமோர் குண்டுகள், ரீ 56 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை தோண்டியெடுத்து கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளுக்கு கடத்தி இரகசியமான முறையில் பாதாள உலகக்குழு உறுப்பினர்களுக்கு விற்பனை செய்தமை மற்றும் கொள்வனவு செய்தமை, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை கொலை செய்ய சதி செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேக நபர்களுக்கு எதிராக விசாரணைகள் இடம்பெற்று வந்தன.
இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, குறித்த 11 பேருக்கும் எதிராக வழக்கு தொடர்வதற்கு போதுமான சாட்சிகள் இல்லை என்று சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும், ஏனைய நான்கு சந்தேகநபர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் வழக்கு தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கொழும்பு குற்ற தடுப்புப் பிரிவினர் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த பின்னர், நீதிவான் இந்த தீர்ப்பை அறிவித்துள்ளார்.