துருக்கிக்கான ஆயுதக் கொள்வனவு அனுமதியை கனடா ரத்துச் செய்துள்ளதாக, கனேடிய வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னியோ (Marc Garneau) அறிவித்துள்ளார்.
துருக்கிக்கான ஆயுதக் கொள்வனவு அனுமதிகளை கனடா கடந்த ஆண்டு இடைநிறுத்தியிருந்தது.
இதுகுறித்து மீளாய்வு செய்த கனடாவின் பூகோள விவகாரங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு திணைக்களம் அனைத்து வகையான இராணுவ பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களின் ஏற்றுமதிகளையும் ரத்துச் செய்வதற்கு முடிவு செய்துள்ளது.
துருக்கிக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கனேடிய தொழில்நுட்பங்கள், நகர்னோ – கரபாக் (Nagorno-Karabakh) போரின் போது பயன்படுத்தப்பட்டதற்கான நம்பகமான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, கனேடிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது, கனடாவின் வெளிவிவகாரக் கொள்கையுடன் ஒத்துப் போகவில்லை என்றும், துருக்கியால் வழங்கப்பட்ட இறுதிப் பயன்பாட்டு உத்தரவாதம், மீறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.