சீன பாதுகாப்பு அமைச்சரின் சிறிலங்கா பயணம், நீண்ட கால இராணுவ ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கம் கொண்டதாக இருப்பதற்கு சாத்தியம் உள்ளதாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த மாத பிற்பகுதியில் சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெங்கி (Wei Fenghe) சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளமை தொடர்பாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில், வெளியாகியுள்ள செய்தியில்,
“சீன பாதுகாப்பு அமைச்சரின் சிறிலங்கா பயணம், வழக்கமான ஒன்று என விபரிக்கப்படக் கூடும்.
ஆனால், இந்தப் பயணம், சிறிலங்காவில், தெற்காசியாவில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் நிலைமைகளுடன் ஒப்பிடும் போது, முக்கியமான ஒரு பயணமாக இருக்கும்.
புதுடெல்லியில் இருந்து விலகிச் செல்ல வைப்பதற்காக, இந்தியாவின் அண்டை நாடுகளுடன் உறவுகளை வளர்ப்பதில் சீனா ஆர்வம் காட்டி வருகிறது.
உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டமான சாலை மற்றும் அணை முன்முயற்சியை இந்த நோக்கத்துக்காக, சீனா திறமையாகப் பயன்படுத்துவதுடன், இராணுவ உறவுகளை மேலும் பலப்படுத்துகிறது.
சீன பாதுகாப்பு அமைச்சரின் இந்தப் பயணம், சிறிலங்காவுடனான சீனாவின் உறவுகளை, வலுப்படுத்துவதாக இருக்கும்.
அத்துடன், இந்தியப் பெருங்கடலில் நிலவும் அதிகாரப் போட்டியின் அளவைப் பொறுத்து, நீண்டகால இராணுவ ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வாய்ப்பும் உள்ளது.” என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.