சிறிலங்காவைச் சேர்ந்த புலம்பெயர் குழுக்களுடன் அமெரிக்கா தொடர்ந்தும் தொடர்புகளைப் வைத்திருக்கும் என்று, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கனடா, பிரத்தானியா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகளில் செயற்படும், ஏழு புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் அண்மையில் தடை விதித்துள்ளது.
ஐ.நா ஒழுங்கமைப்பு விதிகளின் கீழ், புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையை நடைமுறைப்படுத்துவதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த அமைப்புகள் மற்றும் தடை செய்யப்பட்ட தனிநபர்கள் இன்னமும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாகவும், இவர்களால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம்,
“பிராந்தியத்துடன் தொடர்ந்து இணைந்திருக்க உதவுவதில் புலம்பெயர் சமூகங்கள் எமது மதிப்புமிக்க பங்காளிகளாக உள்ளன.
சிறிலங்காவைச் சேர்ந்த உறுப்பினர்கள் உட்பட பல்வேறு தெற்காசிய புலம்பெயர்ந்த குழுக்களுடன் நாங்கள் தொடர்ந்து, தொடர்புகளை பேணி வருகிறோம்.
மேலும் பரஸ்பர நலன்களைப் பற்றிய தொடர்ச்சியான உரையாடல்களை வரவேற்கிறோம்,” என்றும் தெரிவித்துள்ளது.