யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்று மட்டும், யாழ்ப்பாணத்தில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில் 145 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, 25 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
திருநெல்வேலி சந்தை வர்த்தகர்கள், பணியாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் என 21 பேருக்கு தொற்று இனங்காணப்பட்டுள்ளது.
வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில், தனிமைப்படுத்தப்பட்டிருந்த இருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள, ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் விடுதியில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், மருத்துவர் கேதீஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கரவெட்டி பிரதேசத்தைச் சேர்ந்த, 83 வயதுடைய முதியவர் ஒருவர் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளார்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட அவர் ஹோமகம மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அங்கு நேற்று மரணமடைந்துள்ளார்.
இதையடுத்து, யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.