வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு மாவை சேனாதிராசாவுக்கு தகுதியில்லை என்று முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்துக்கு, கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம்,
“வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் பதவிக்கு மாவை சேனாதிராசா பொருத்தமானவர் அல்ல என்ற காரணத்தினால், விக்னேஸ்வரனை வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக, இரா.சம்பந்தன் தெரிவு செய்திருக்கவில்லை.
அவ்வாறான கருத்தை இரா.சம்பந்தன் ஒருபோதும், எம்மிடம் தெரிவிக்கவில்லை.
மாவை சேனாதிராசா தகுதியற்றவர் என்பதால், விக்னேஸ்வரன் வேட்பாளர் ஆக்கப்படவில்லை.
எவ்வாறாயினும், முதலமைச்சராக கொண்டு வரப்பட்டு இரண்டரை ஆண்டுகளிலேயே வடக்கு மாகாணசபையை சீரழித்த சி.வி.விக்னேஸ்வரன், தனக்கு என்ன தகுதியுள்ளது என்று மாவை சேனாதிராசாவை தகுதியற்றவர் என்று கூற முடியும்? எனவும், சி.வி.கே. சிவஞானம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேவேளை, வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வேலன் சுவாமிகளை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தலாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியிருப்பது அவரது சொந்தக் கருத்து என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சித் தலைவரான சிறிகாந்தா இதுகுறித்து மேலும் கருத்து வெளியிடுகையில்,
“சி.வி.விக்னேஸ்வரன் தனது தனிப்பட்ட கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அதற்கு அவருக்கு உரிமையுள்ளது.
அதனை விமர்சனம் செய்து சர்ச்சையை உருவாக்க கூடாது.
அதேவேளை, வடக்கு, கிழக்கில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்கப்படுகின்றவர், நிர்வாக ஆளுமையும், நடைமுறை அரசியலைக் கையாளத் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.