மேற்குவங்கத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக, எஞ்சியுள்ள நான்கு கட்ட தேர்தல்களையும், ஒரே கட்டமாக நடத்தி முடிக்க வேண்டும் என, முதல்வர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.
மாநில சட்டசபை தேர்தல், கடந்த மாதம் 27ஆம் திகதி ஆரம்பித்து, இம்மாதம் 29 ஆம் திகதி வரை, எட்டு கட்டங்களாக நடைபெறுகிறது.
நான்காம் கட்ட தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில், ஏனைய நான்கு கட்ட தேர்தல்களை நடத்தி முடிக்க வேண்டிய நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரான முதல்வர் மம்தா பானர்ஜி,
“கொரோனா தொற்று பரவல் மேலும் அதிகாரித்தால் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே மக்களின் நலன் கருதி எஞ்சியுள்ள நான்கு கட்ட தேர்தல்களை ஒரே கட்டமாக சேர்த்து, ஒரே நாளில் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.
எனினும், எஞ்சியுள்ள தேர்தல்களை ஒன்றாக நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.