பாகிஸ்தானில் வசித்து வரும் பிரான்ஸ் குடிமக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள தெஹ்ரிக் – இ – லப்பைக் பாகிஸ்தான் என்ற தீவிர வலதுசாரி அமைப்பு, பிரான்சுக்கு எதிராக கடந்த சில நாட்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.
பாகிஸ்தானில் இருந்து பிரான்ஸ் தூதுவர் வரும் 20-ம் நாளுக்குள் வெளியேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடங்கப்பட்ட, இந்த போராட்டம் ஏனைய பகுதிகளுக்கும் பரவியுள்ளது.
பிரான்ஸ் அரசுக்கு எதிராகவும், பிரான்ஸ் மக்களுக்கு எதிராகவும் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில், இருவர் உயிரிழந்துள்ளனர்.
வன்முறைகள் அதிகரித்து வருவதால் பாகிஸ்தானில் வசித்து வரும் பிரான்ஸ் மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு பிரான்ஸ் அரசு அறிவுறுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள பிரான்ஸ் தூதரகமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பிரான்ஸ் நிறுவனங்கள் அனைத்தும் தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.