மாகாண சபைத் தேர்தல் இம்முறை நடைபெற்றால் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக நானே களமிறங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பலர் விரும்புகின்றனர். அவர்களின் விருப்பத்தை இந்தத் தடவை நான் புறந்தள்ள மாட்டேன் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
“கடந்த மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நான் போட்டியிட வேண்டும் என்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும், உறுப்பினர்களும் விரும்பினர். தங்கள் விருப்பத்தை அவர்கள் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தனர்.
எனினும், அந்தத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட விக்னேஸ்வரனும் விரும்பினார். அதனால் எனக்கான சந்தர்ப்பத்தை அவருக்கு வழங்கியிருந்தேன். அவரின் வெற்றிக்காக இரவு, பகல் பாராது உழைத்தேன். எனது உழைப்பு வீண்போகவில்லை. அவர் முதலமைச்சராக தெரிவாகினார்.
அண்மையில் வவுனியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்திலும் வடக்கின் முதலமைச்சர் வேட்பாளராக என்னைக் களமிறக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் பரிந்துரைத்துள்ளார்.
எனவே, கடந்த முறை நான் விட்ட தவறை இந்த முறை செய்யமாட்டேன். இக்கட்டான இந்தக் காலத்தில் வடக்கின் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட நான் தயாராக இருக்கின்றேன்”என்று அவர் மேலும் தெரிவித்தார்.