அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகரத்தின் ‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் ஆராய்வதற்கு பிரதம நீதியரசர் தீர்மானித்துள்ளார்.
இதற்கமைய பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் தலைமையில் புவனேக அலுவிகாரே, பிரியந்த ஜயவர்தன, மூர்து பெர்ணாண்டோ மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் அந்த மனுக்கள் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆராயப்படவுள்ளது.
குறித்த சட்டமூலம் நாட்டின் இறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக குறிப்பிட்டு ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, தகவல் தொழில்நுட்ப தொழில் நிபுணர்களின் சங்கம் மற்றும் மாற்றுக்கொள்கைக்கான மத்திய நிலையம் ஆகியன இன்றைய தினம் உயர்நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ளன.
குறித்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுடன், அது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் அதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டுள்ளனர்.