ஸ்காபறோ சுகாதார வலையமைப்பின் சென்ரினரி வளாகத்திலும், சென்ரெனியல் கொலிஜின் புறோகிறஸ் வளாகத்திலும் தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் திடீரென நிறுத்தப்பட்டமையால் ஆழ்ந்த ஏமாற்றம் அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டு ஒன்ராரியோ முதல்வர் டக்போர்ட்டிற்கு ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரி ஆனந்தசங்கரி, ஷேன் சென் , ஜோன் மக்கே, ஜீன் யிப், ஸல்மா ஸாஹிட் ஆகியோரே இவ்வாறு கடிதம் அனுப்பியவர்களாவர்.
இக்கடிதத்தின் பிரதிகள் அமைச்சர் பில் பிளேயர், மற்றும் ஒன்ராரியோவின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.
குறித்த கடிதத்தில், ஸ்காபறோ சுகாதார வலையமைப்புக்கு உறுதியளிக்கப்பட்ட பத்தாயிரம் தடுப்பூசிகள் மறுக்கப்பட்டமைக்கான காரணத்தினை தெளிவு படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
அத்துடன், ஸ்காபறோ சுகாதார வலையமைப்பு சென்ரினரி வளாகம், சென்ரெனியல் கல்லூரி புறோகிறஸ் வளாகம் ஆகியவற்றின் பாரிய தடுப்பூசி முகாம்களை உடனடியாக மீளத் திறக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
ஸ்காபறோவில் உள்ள மூன்று மருத்துவமனைகளிலும் கொரோனா காரணமாக அனுமதிக்கப்படுவோருக்குச் சிகிச்சையளிப்பதற்குத் தேவையான பணியாளர்களும், தனிநபர் பாதுகாப்பு அங்கிகளும், பராமரிப்பும் இருப்பதை உறுதி செய்வதற்கு ரொறன்றோ மாநகரத்துடனும், ஸ்காபறோ சுகாதார வலையமைப்புடனும் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் நலிவடைந்த சமூக உறுப்பினர்களுக்கு உதவியாக ஸ்காறோவில் மேலதிக தடுப்பூசி வழங்கும் இடங்களை அடையாளம் காணுமாறும் கோரப்பட்டுள்ளது.