கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் நாட்டின் அரசியலமைப்பை மீறுகிறது என்று அபயராமய விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராக அவர், உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
சட்டமா அதிபர் மற்றும் நாடாளுமன்றச் செயலாளர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்த சட்டமூலத்தினால், ஆணைக்குழுவுக்கு வழங்கப்படும் அதிகாரங்கள் நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை இழிவுபடுத்துவதாகவும், அது நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை ஒப்படைப்பதற்கு அல்லது கைவிடுவதற்கும் சமமானது என்றும், அவர் கூறியுள்ளார்.
இது, அரசியலமைப்பின் 76 ஆவது பிரிவையும், 4 ஆவது பிரிவின் அ பகுதியையும் மீறும் வகையில் அமைந்துள்ளதாக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றில் தொடர்ந்தும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவை உருவாக்கும் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி, அரசியல் கட்சிகள், பௌத்த பிக்குகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், மற்றும் பிரமுகர்கள், உயர்நீதிமன்றில் மனுக்களைத் தாக்கல் செய்து வருகின்றனர்.
இதுவரை 16இற்கும் எதிரான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் மேலும் பல மனுக்கள் தாக்கல் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மனுக்கள் நாளை மறுநாள் தலைமை நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐந்து நீதியரசர்களைக் கொண்ட அமர்வு முன்பாக, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.