சிரிய வான்படையின் உலங்குவானூர்தி ஒன்றே, எதிரணி வசம் இருந்து நகர் மீது குளோரின் குண்டை வீசியது என்று இரசாயன ஆயுதங்கள் தொடர்பான கண்காணிப்பு அமைப்பு முடிவுக்கு வந்துள்ளது.
2018ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி, சராகீப் (Saraqeb) நகரின் மீது சிரிய வான்படையின் சிறப்பு படைப்பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ள உலங்குவானூர்தியில் இருந்து வீசப்பட்ட குளோரின் குண்டினால் 12 பேர் வரை பாதிக்கப்பட்டனர் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள் தொடர்பான அமைப்பின், விசாரணைக்குழு, நடத்திய விசாரணைகளை அடுத்து, குறைந்தபட்சம் ஒரு குளோரின் வாயு அடங்கிய உருளை வீசப்பட்டது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
எனினும் இதுகுறித்து சிரிய அரசாங்கம் உடனடியாக எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.
முன்னதாக, போரின் போது குளோரின் வாயுவை பயன்படுத்தவில்லை என்று சிரியா கூறியிருந்தது. ஆயினும், பாதிக்கப்பட்ட மக்களிடம் பெறப்பட்ட தகவல்கள், மற்றும் ஏற்பட்ட பாதிப்புகள், அறிகுறிகள் மற்றும் ஏனைய தகவல்களின் அடிப்படையில், உலங்குவானூர்தியில் இருந்து வீசப்பட்டது குளோரின் வாயு குண்டு தான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது