அரசு தமது பெளத்த அமைப்புகளை தடை செய்ய போகிறோம் என்ற புரளியை கிளப்பி மக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கிறது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
பெங்கமுவே நாலக தேரர், அஸ்கிரிய அனுநாயக தம்மானந்த தேரர், ரத்ன தேரர், முருத்தெடுகம ஆனந்த தேரர், சிங்கள ராவய தேரர், ஞானசார தேரர், ராவண பலய தேரர் ஆகிய பெளத்த தீவிரர்கள் இப்போது புதிய பாடல் ஒன்றை பாடுகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில் இந்த நாடு உருப்பட வேண்டுமானால், பெளத்த தேரர்கள் அரசியலில் தலையிடுவதை தடை செய்யத்தான் வேண்டும். அப்படி ஒரு சூழல் ஏற்படுமாகவிருந்தால் நான் இரண்டு கைகளையும் உயர்த்தி ஆதரிப்பேன். ஆனால், இந்த அரசு இப்போது இவர்களை தடை செய்து தற்கொலை செய்ய போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
முஸ்லிம் அரசியல்வாதிகள், குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் ரிசாத், ரவூப் ஹக்கீம் மீது, உயிர்த்த ஞாயிறு குண்டு தொடர்பில் குற்றம் சாட்டப்பட வேண்டும் என இவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அதற்கான சாட்சியம் இல்லை. அப்படி சாட்சியங்கள் இருந்தால், இந்த அரசே சும்மா விடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தேரர்களிடம் சாட்சியம் இருந்தால் அதை விசாரணை கமிசனிடம் அவர்கள் தர வேண்டும். ஆனால், அப்படி இவர்களிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை. தமிழ், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் மட்டுமே இருக்கிறது. தமிழ், முஸ்லிம் அடிப்படைவாதம் பற்றி பேசும் இவர்கள் தமது அடிப்படைவாத, இனவாதத்தை தேசபக்தியாக காட்டுகிறார்கள்.
அடுத்த இரண்டு வருடத்தில், நாடு அரசியல், சமூக, பொருளாதார துறைகளில் தோற்றுப்போன நாடாக உலகில் ஒதுக்கப்படும். அதன்பிறகு சாம்பலில் இருந்து எழுந்து வர வேண்டியது தான் என்று அவர் தெரிவித்துள்ளார்.