வவுனியாவில் மரங்களை கடத்திச்சென்ற வாகனம் ஒன்று மோதியதில் இரண்டு இராணுவத்தினர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏ-9 வீதியில் வவுனியா நோக்கி சட்டவிரோதமான முறையில் மரங்களை ஏற்றிச்சென்ற வாகனத்தை ஓமந்தை நகர்பகுதியில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில் கடமையில் இருந்த இராணுவத்தினர் வழிமறித்துள்ளனர்.
இதன்போது மரக்கடத்தல்காரர்கள் வாகனத்தினை நிறுத்தாமல் ஓட்டிச்சென்றதுடன், கடமையில் இருந்த இராணுவத்தினர் மீதும் மோதியுள்ளனர்.
இதனால் நீண்டதூரத்திற்கு இழுத்துச்செல்லப்பட்ட இராணுவவீரர் ஒருவர் வீதியில் வீசப்பட்டநிலையில் படுகாயமடைந்துள்ளதுடன், மற்றொரு சிப்பாயும் காயங்களிற்குள்ளாகியுள்ளார்.
காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
மரங்களை கடத்திச்சென்ற வாகனம் வீதிக்கரையில் விபத்திற்குள்ளாகி நின்றதுடன், அதன் சாரதி தப்பித்து ஓடியுள்ளார்.
அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.