வடக்கு மாகாண சபைத் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கத் தயாராக இல்லை என்று யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன முதல்வரும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரெழுச்சி அமைப்பின் இணை அமைப்பாளருமான வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வேலன் சுவாமிகளை பொது வேட்பாளராக நிறுத்தினால் ஆதரிக்கத் தயாராக இருப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் அண்மையில் கூறியிருந்தார்.
இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள வேலன் சுவாமிகள், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரெழுச்சி அமைப்பின் உறுப்பினர்கள் எவரும், கட்சி அரசியலிலோ, தேர்தல் அரசியலிலோ ஈடுபடுவதில்லை என்பது, அந்த அமைப்பின் கொள்கைகளில் ஒன்றாகும்.
அந்த கொள்கைக்கு அடியேனும் விதிவிலக்கு அல்ல.
நாங்கள் சமூகங்கள் மற்றும் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை ஒழுங்குபடுத்தும் விடயத்திலேயே எங்களது பணியை தொடருவோம்” என்றும் வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.