பிரபல நகைச்சுவை நடிகரும் சமூக ஆர்வலருமான விவேக்கின் மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரபல நடிகர் விவேக்கின் மறைவு அனைவரிடத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் மோடி, கீச்சகப் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், விவேக்கின் நகைச்சுவையும் புத்திசாலித்தனமான வசனங்களும் மக்களை மகிழ்வித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல இலட்சம் மரங்களை மண்ணில் விதைத்த இலட்சிய மனிதர், தனது திரையுலகக் கருத்துக்கள் மூலம் தமிழக இளைஞர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல அரும்பாடுபட்ட சின்னக்கலைவாணர் விவேக்கின் இழப்பு கலைத்துறைக்கும், தமிழகத்திற்கும் பேரிழப்பு என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சின்னக் கலைவாணர் விவேக்கின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தலைவர் கலைஞரிடம் தனி அன்பு கொண்டவர் எனவும் சூழலியல் ஆர்வலர் மற்றும் ஆற்றல்மிகு நடிகர் விவேக்கை இயற்கை இத்தனை அவசரமாகப் பறித்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்