ஆப்கானிஸ்தானில் மசூதி ஒன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானின், ஜலாலாபாத் நகரில் நேற்று இரவு 9 மணியளவில், மசூதி ஒன்றுக்குள் புகுந்த ஆயுதமேந்திய நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணைகளில், ஹாஜி அப்துல் வஹாப் என்பவரின் 5 மகன்கள் மற்றும் 3 உறவினர்களே இந்தத் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளதாக, மாகாண ஆளுநர் உறுதிப்படுத்தி உள்ளார்.
அதேவேளை, நேற்று மாலையில், ஹெராத் மாகாணத்தில் நடத்தப்பட்ட வாகன குண்டு தாக்குதலில் 3 காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் விலக்கப்படுகின்ற நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.