சிறிலங்கா காவல்துறையின் தொடர்பாடல் வலையமைப்பை மேம்படுத்துவதற்கான புதிய வானொலித் தொடர்பாடல் கருவித் தொகுதியை சீனா கொடையாக வழங்கவுள்ளது.
டெட்ரா (TETRA ) என்ற இந்த தொடர்பாடல் கருவி வலையமைப்பின் மூலம், காவல் நிலையங்களுக்கும், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் இடையிலான தொடர்பாடல் வசதிகளை அதிகரிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
சீனாவின் பீஜிங் நகரில் பயன்படுத்தப்படும், இந்த வானொலித் தொடர்பாடல் கருவித் தொகுதி, முதற்கட்டமாக மேல் மாகாணத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மாதம் 27ஆம் நாள், சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெங்கி (Wei Fenghe) இரண்டு நாள் பயணமாக, கொழும்பு வரும் போது, இந்த தொடர்பாடல் கருவி வலையமைப்பு கொடையாக வழங்கப்படவுள்ளது.
சிறிலங்கா ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்டோரைச் சந்திக்கவுள்ள சீன பாதுகாப்பு அமைச்சர், அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரம் ஆகியவற்றுக்கும் செல்வார் என்றும் கூறப்படுகிறது.