நாட்டைச் சீர்குலைக்க அமெரிக்கா முயற்சிக்கிறது என்று சிறிலங்கா அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
தமது அரசியல் நோக்கங்களை அடைவதற்காக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக, சிறிலங்காவைச் சீர்குலைக்க, அமெரிக்கா முயற்சிக்கிறது என்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவரே, கொழும்பு துறைமுக நகரம் பண மோசடிகளுக்கு வழி வகுக்கும் என்று முதன்முதலில் கூறியிருந்தார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, கொழும்பு துறைமுக நகரம் பணமோசடியின் புகலிடமாக மாறும் என்று, சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் கூறிய கருத்துக்களில் எந்த உண்மையும் இல்லை என்று, இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
“பண மோசடி தொடர்பான சட்டங்களில் நாங்கள் எந்த மாற்றமும் செய்யவில்லை. அந்த சட்டங்கள் சர்வதேச பண மோசடி தடுப்பு சட்டங்களுக்கு அமையவே உள்ளன.
அமெரிக்க தூதுவர் இவ்வாறானதொரு அறிக்கையை வெளியிட்டிருப்பது ஆச்சரியமாக உள்ளது. பொறுப்பு வாய்ந்த ஒருவரிடம் இருந்து இவ்வாறான பொறுப்பற்ற கருத்தை நான் எதிர்பார்க்கவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்