கொழும்பு துறைமுக நகர விவகாரத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தொலைபேசி மூலம் அழைத்து, எச்சரித்தமை தொடர்பாக, சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம், முருத்தெட்டுவே ஆனந்த தேரர், முறையிட்டுள்ளார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்தில் தங்கியிருந்த பிரதமருடன், நேற்று முன்தினம் தொலைபேசி மூலம், அபயராமய விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் உரையாடியுள்ளார்.
இதன்போது, சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தொலைபேசியில் அழைத்து தம் மீது குற்றம்சாட்டியமை தொடர்பாக, சிறிலங்கா பிரதமரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.
இது குறித்து பீதியடைய வேண்டாம் என்று முருத்தெட்டுவே ஆனந்த தேரரை கேட்டுக் கொண்ட சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச, தாம் கொழும்பு திரும்பி, நாரஹென்பிட்ட விகாரைக்கு வந்து தேரரை சந்திப்பதாகவும், தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சிறிலங்கா ஜனாதிபதியின் தொலைபேசி அழைப்பு தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்த முருத்தெட்டுவே ஆனந்த தேரர், ஜனநாயகத்துக்கு எதிராக அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்த முனையும் எவருக்கு எதிராகவும், நிலைப்பாட்டை எடுப்பதற்கு பௌத்த பிக்குகள் தயங்க மாட்டார்கள் என்று கூறியிருந்தார்.
அத்துடன், நாட்டின் சட்டங்களை தன்னிச்சையாக மாற்றுவதற்கு முயற்சிக்கும் எவருக்கு எதிராகவும் பௌத்த பிக்குகள் குரல் எழுப்புவார்கள்.
எங்களை மௌனமாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆனால், குடபொல, வாரியபொல மற்றும் குணானந்த தேரர் தலைமுறைகளைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் எந்த அச்சுறுத்தல்களுக்கும் தலை வணங்கமாட்டார்கள்” என்றும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.