வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு கட்டுப்பாடுகளை அதிகரிக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமை தொற்று நோயியல் நிபுணர் மருத்துவர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
“நாட்டில் தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளது.
அதேவேளை, பல நாடுகளில் தொற்று மிகமோசமாக அதிகரித்துள்ளது.
இவ்வாறான நிலையில், வெளிநாடுகளில் இருந்து வருவோர் மத்தியில் தொற்று அதிகளவில் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த மாதத்தில் கண்டறியப்பட்ட தொற்றாளர்களில் 15 வீதமானோர், வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களாவர்.
இந்த ஆண்டில் இதுவரை கண்டறியப்பட்ட 52 ஆயிரத்து 710 தொற்றாளர்களில், 1,593 பேர், வெளிநாடுகளில் இருந்து திரும்பியிருந்தனர்.
இந்த மாதம் இதுவரை இனங்காணப்பட்ட 3 ஆயிரத்து 480 தொற்றாளர்களில், 538 பேர், வெளிநாடுகளில் இருந்து திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
இதனால் வெளிநாடுகளில் இருந்து திரும்புவோர் தொடர்பான கட்டுப்பாடுகளை மீளாய்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.