தமிழர் தாயகப் பகுதிகளில், அன்னை பூபதியின் 33 ஆவது நினைவேந்தல்கள், சிறிலங்கா அரசின் தடைகள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இன்று இடம்பெற்றுள்ளன.
மட்டக்களப்பு, கல்லடி, நாவலடியில் உள்ள அன்னை பூபதியின் சமாதியில் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இன்று காலை 6.00 மணியளவில் நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சரவணபவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான அரியநேத்திரன், சிறிநேசன், ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை தவிசாளர் சர்வானந்தா, முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் நடராஜா, மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களான ஜெயா மற்றும் இராஜேந்திரன் ஆகியோர் ஈகச்சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தி, அகவணக்கம் செலுத்தினர்.
இங்கு நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு, நீதிமன்றத்தில் பெறப்பட்ட தடையுடன், காத்தான்குடி காவல்துறையினர் சென்ற போது, நிகழ்வு நிறைவடைந்து விட்டதால், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.
அதேவேளை, அன்னை பூபதியின் 33 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், பல்கலைக்கழகத்தில் இன்று மதியம் நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.
மாணவர்கள் அன்னை பூபதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.