கொழும்பு துறைமுக நகரம் தொடர்பாக அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் குழப்பமான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார் என்று சிறிலங்கா அரசாங்க பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டம், நாட்டின் அரசியலமைப்புக்கு இணங்கவே உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டம் நாட்டின் அரசியலமைப்புடன் இணங்கிப் போவதாக சட்டமா அதிபர் அறிவித்த பின்னரே, இதனை நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் சேர்க்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால், அமெரிக்க தூதுவர் துறைமுக நகரம் தொடர்பாக குழப்பமான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.
ஒருமுறை அவர், பணச் சலகைக்காக, கறுப்புப் பணம் துறைமுக நகருக்கு கொண்டு வரப்படலாம் என்கிறார்.
இன்னொரு முறை அவர், துறைமுக நகரில் முதலீடு செய்வதற்கு அமெரிக்கர்கள் தயாராக இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக வெளிநாட்டவர்களையும் நியமிக்க முடியும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
“தேவைப்பட்டால் வெளிநாட்டவர்களையும், சிறிலங்கா ஜனாதிபதியினால் இந்த ஆணைக்குழுவுக்கு நியமிக்க முடியும். அதற்கு எந்த தடையும் இல்லை. என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்..