சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில், அலரி மாளிகையில் நடைபெற்ற, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தில், கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றதாக செய்திகள் கூறுகின்றன.
இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பமான இந்த கூட்டத்தில், மாகாண சபைத் தேர்தல்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடல்கள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
ஆளும் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் குழப்பங்கள் அதிகரித்துள்ள நிலையிலேயே இந்தச் சந்திப்புக்கு பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார்.
காலையில் தொடங்கிய கூட்டத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளை அடுத்து, அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் வெளிநடப்பு செய்துள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்று மாலை 6.30 மணியளவில் சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.