உலக சுகாதார ஸ்தாபனத்தால் அங்கீகரிக்கப்படாத சீன தடுப்பூசியை அரசு மக்களுக்கு வழங்க முயற்சிக்கிறதா? என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் மந்த கதியிலேயே நடைபெறுகிறது. குறிப்பாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட மக்களுக்கே தற்போது அதிகமாக தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இவ்வாறான நிலையில், உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்படாத சீன தடுப்பூசியை எங்கள் தலையில் கட்டப்பார்க்கின்றீர்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
அவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டால், அது சீன தடுப்பூசியாக இருந்தாலும் எந்த தடுப்பூசியாக இருந்தாலும் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்காத எந்த விடயத்தையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
சிறிய தொற்று வந்தபோது முழு நாட்டையும் முடக்கினீர்கள். யாழ். குடாநாட்டினை முடக்கினீர்கள். தற்போது என்ன செய்துகொண்டு இருக்கின்றீர்கள்?
எனவே உடனடியாக அரசாங்கம் சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற பாகுபாடின்றி அனைத்து மக்களின் உயிர்களையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.