ஆபிரிக்க நாடான சாட்டில், தாக்குதல் நடத்திய 300 கிளர்ச்சியாளர்களை கொன்றுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
நாட்டின் வடக்குப் பகுதியில் எட்டு நாட்களுக்கு முன்னதாக, கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களை ஆரம்பித்த பின்னர், இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
சாட் ஜனாதிபதி இட்ரிஸ் டெபி (Idris Deby) ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள், கனரக ஆயுதங்களுடன், லிபியாவில் உள்ள தமது தளங்களில் இருந்து கடந்த 11ஆம் நாள் தாக்குதல்களை நடத்த ஆரம்பித்திருந்தனர்.
இந்த சண்டைகளிலேயே 300 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், தமது தரப்பில் 5 இராணுவத்தினர் உயிரிழந்திருப்பதாகவும் சாட் இராணுவம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, இந்த மோதல்களால் வெளிநாட்டு இராஜதந்திரிகள் பதற்றமடைய வேண்டியதில்லை என்றும் நிலைமைகள் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், சாட் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.