தமிழர்களின் நிலங்களை சிறிலங்கா அரசு பறிப்பதை இந்திய அரசும், உலக நாடுகளும் தடுத்து நிறுத்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்து 12 ஆண்டுகள் கடந்த பின்னரும், ஈழத்தமிழர்களுக்கு எந்த உரிமையும் கிடைக்கவில்லை. இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை.
உலக நாடுகளை ஏமாற்ற, ஏற்கனவே பறித்த நிலங்களை திரும்ப வழங்குவதாக போக்குக் காட்டிக்கொண்டே, மறுபுறம், புதிய நிலங்களைப் பறித்து வருகிறது சிங்கள அரசு.
அண்மையில், மட்டக்களப்பு தமிழ் விவசாயிகளின் நிலங்களில் சிறிலங்கா வனத்துறையினர் திடீரென எல்லைக் கற்களை நட்டு, வனப்பகுதிகள் என அறிவிப்பு செய்து இருக்கிறது.
இந்த இடங்களை விட்டுத் தமிழர்கள் வெளியேற வேண்டும் என மிரட்டுகிறார்கள்.
தமிழர்களின் நிலங்களை சிறிலங்கா அரசு பறிப்பதை இந்திய அரசும், உலக நாடுகளும் தடுத்து நிறுத்த வேண்டும்.
ஏற்கனவே பறித்துக் கொண்ட நிலங்களில் இருந்து சிங்களக் குடியேற்றங்களையும், சிங்களப் படை முகாம்களையும் அகற்ற வேண்டும் என வலியுறுத்த வேண்டும்.” என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.