அடுத்த மூன்று வாரங்களும் மிகவும் சிக்கலானவையாக இருக்கும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“குறிப்பிட்டளவான மக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றவில்லை.
சிறிலங்காவில் இரண்டாவது அலை ஒரு நபர் மூலமே உருவாகி, 90 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர்.
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புபவர்கள் கொண்டு வரும் பிசிஆர் சோதனை சான்றிதழ்கள் பெரும்பாலும் போலியானவையாக உள்ளன.
வெளிநாடுகளில் இருந்து திரும்பிய கணிசமானோருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மட்டும், வெளிநாட்டில் இருந்து திரும்பிய 70 பேருக்கு தொற்று இனங்காணப்பட்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, நாளாந்தம் பத்தாயிரம் பிசிஆர் மற்றும், அன்ரிஜன் பரிசோதனைகளை நடத்தாவிட்டால், இந்தியா இப்போது எதிர்கொள்ளும் நிலைமையை சிறிலங்காவும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் மகேஸ் பாலசூரிய தெரிவித்துள்ளார்.
புதுவருட காலப்பகுதியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாத நிலையில், சுகாதார வழிகாட்டுமுறைகள் புறக்கணிக்கப்பட்டிருந்தன என்றும், இதன் விளைவுகளை அடுத்த 14 நாட்களுக்குள் எதிர்பார்க்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.