அனலைதீவுக்கு பயணம் மேற்கொண்ட போது வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் கஜதீபன் படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்து காயமடைந்துள்ளார்.
ஊர்காவற்துறை கண்ணகை அம்மன் இறங்குதுறைப் பகுதியில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மாரடைப்பினால் மரணமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனலைதீவு வட்டார பிரதேச சபை உறுப்பினரின் மரணச்சடங்கில் பங்கேற்கச் சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
அதிகளவு பயணிகள் ஒரு படகில் ஏறியதால், சிலரை மற்றொரு படகிற்கு மாற்றி ஏற்றிக் கொண்டிருந்த போது, காற்றினால் படகுகள் இரண்டும் விலகியதாகவும், அப்போது படகை கடந்து கொண்டிருந்த கஜதீபன் கடலுக்குள் தவறி வீழ்ந்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் சிறிய காயங்களுக்கு உள்ளாகிய கஜதீபன், படகில் இருந்தவர்களின் உதவியுடன், படகில் ஏற்றப்பட்டார் என்றும், பின்னர் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.