சாட் ஜனாதிபதி இட்ரிஸ் டெபி (Idriss Déby) கிளர்ச்சியாளர்களுடன் இடம்பெற்ற மோதல்களின் போது உயிரிழந்துள்ளார் என, இராணுவம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் ஆறாவது தடவையாகவும் இட்ரிஸ் டெபி வெற்றி பெற்றுள்ளார் என அறிவிக்கப்பட்டு ஒரு நாள் கழித்து அவரது மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது,
இதையடுத்து, அரசாங்கமும் நாடாளுமன்றமும் கலைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள சாட் இராணுவம், எல்லைகள் மூடப்பட்டு, ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
நாட்டின் தலைநகருக்கு வடக்கே, பல நூறு கிலோ மீற்றர் தொலைவில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களை நடத்தி வரும், பகுதிக்கு வார இறுதியில் சென்றிருந்த போதே, ஜனாதிபதி டெபி மோதல்களில் அகப்பட்டு மரணமானார்.
அவர் தனது இறுதி மூச்சை போர்முனையில் விட்டுள்ளார் என இராணுவ ஜெனரல் ஒருவர் தொலைக்காட்சியில் அறிவித்துள்ளார்.
இதையடுத்து, டெபியின் 37 வயதுடைய மகனாக நான்கு நட்சத்திர ஜெனரல் தலைமையிலான சபை ஒன்று அடுத்த 18 மாதங்களுக்கு நாட்டை ஆட்சி செய்யும் என்றும், அதன் பின்னர் தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் இராணுவம் அறிவித்துள்ளது. 68 வயதுடைய முன்னாள் இராணுவ அதிகாரியான டெபி, கடந்த 1990ஆம் ஆண்டு இராணுவப் புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்து, கடந்த 3 பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்து வந்தார்