அரசியல் நோக்கம் கொண்ட உள்ளூர் தரப்புகள் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னணியில் இருந்தாக தாம் கூறவில்லை என்றும், சர்வதேச சக்திகளையே தாம் குறிப்பிட்டதாகவும், பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் பேராயர் மல்கம் ரஞ்சித் நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் மத அடிப்படைவாதத்தினால் மேற்கொள்ளப்படவில்லை என்றும், அரசியல் நோக்கம் கொண்ட சக்திகளால் மத அடிப்படைவாதிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்றும் கூறியிருந்தார்.
அவரது கருத்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், பேராயர் மல்கம் ரஞ்சித், தமது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இருந்த சர்வதேச சக்திகளைப் பற்றியே நான் கூறியிருந்தேன்.
உள்ளூர் அரசியல் குழுக்கள் பின்னணியில் இருந்ததாக கூறவில்லை.
ஆயுதங்களை உருவாக்கும் சில சக்திகள், வஹாபியிசம் போன்ற மத மற்றும் இன தீவிரவாத சக்திகளைப் பயன்படுத்தி, மோதல்களை தூண்டி விடுகின்றன.
அவர்களின் ஆயுதங்களை சந்தைப்படுத்துவதற்காகவே அவர்கள் அவ்வாறு செயற்படுகின்றனர்.அத்தகைய குழுக்களையே நான் குறிப்பிட்டிருந்தேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.