சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவினால், நடத்தப்பட்ட பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தை, எட்டுக் கட்சிகள் புறக்கணித்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தக் கூட்டத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைவர் மைத்ரிபால சிறிசேன, அமைச்சர்கள் தினேஸ் குணவர்த்தன, ஜி.எல்.பீரிஸ், மற்றும் பசில் ராஜபக்ச உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
எனினும், பொதுஜன பெரமுனவின் முக்கியமான 8 பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண, வீரசிங்க, அதாவுல்லா, ரிரான் அலஸ் போன்றவர்கள் இந்தக் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.
உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டவர்கள் நேற்று அலரிமாளிகைக்கு சென்று சிறிலங்கா பிரதமரைச் சந்தித்து விட்டு கூட்டத்தில் பங்கேற்காமல் வெளியேறிச் சென்றுள்ளனர்.
நேற்றைய கூட்டத்தில் கட்சித் தலைவர்களுக்கு புறம்பாக, 51இற்கும் மேற்பட்ட மாவட்ட தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
இதனால், அதிருப்தியடைந்த 8 கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தை புறக்கணித்தனர் என்று உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து ஆராய, பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மட்டும் பங்கேற்கும் கூட்டத்தை ஒழுங்கு செய்யுமாறு, சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு தமது தரப்பினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அதனை ஏற்றுக் கொண்டார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.