அமெரிக்காவில் கடந்த ஆண்டு மே மாதம் ஜோர்ஜ் புளொய்ட் (George Floyd) என்ற கறுப்பினத்தவரை கழுத்தை நெரித்து கொலை செய்த முன்னாள் காவல்துறை அதிகாரி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மின்னபொலிஸ் நகரில் இடம்பெற்ற இந்தக் கொலையை அடுத்து கடந்த ஆண்டு அமெரிக்காவிலும் உலகின் பல நாடுகளிலும், நிறவெறிக்கு எதிரான போராட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றிருந்தன.
இந்த நிலையில், ஜோர்ஜ் புளொய்ட் கொலைக்கு காரணமான முன்னாள் காவல்துறை அதிகாரிக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கின் தீர்ப்பு இன்று பிற்பகல் 4 மணியளவில் அறிவிக்கப்பட்டது.
குற்றவாளி மீதான அனைத்துக் குற்றங்களும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள நீதிபதி, அவருக்கு வழங்கப்பட்ட பிணையையும் ரத்துச் செய்துள்ளார்.
இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டதை அடுத்து நீதிமன்றத்தக்கு வெளியிலும், அமெரிக்காவின் பல இடங்களிலும் கொண்டாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. முன்னதாக புளொய்ட்டின் குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்த வழக்கில் சரியான தீர்ப்புக் கிடைக்கும் என்று பிரார்த்திப்பதாக தெரிவித்திருந்தார்