கடந்த 30 வருட போரில் உயிரிழந்தோரை நினைவு கூருவதற்கு, சிறிலங்கா அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்று, யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்ற போரின் போது வடக்கில் எத்தனையோ ஆலயங்கள் குண்டு வீசப்பட்டு தாக்கப்பட்டன, எத்தனையோ மக்கள் இறந்தார்கள், தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள்.
அந்தவேளையில் தென்பகுதியில் இருந்து யாரும் எங்களுக்காக குரல் கொடுக்கவில்லை. எங்களுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
ஆனாலும், ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்கனை நினைவுகூரும் நிகழ்வுகளை நடத்தி, ஆதரவையும், அஞ்சலிகளையும் செலுத்துவதற்கு முன் வர வேண்டும்.
இந்த வேளையில் சிறிலங்கா அரசாங்கத்திடம் நாங்கள் ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகிறோம்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தோரை நினைவுகூர்வதற்கு அனுமதி வழங்கி அதற்கான பாதுகாப்பு அளிப்பதைப் போல, 30 ஆண்டுகளாக நடந்த போரின் போது, இறந்து போன ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துபோன இளைஞர் யுவதிகளையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்த எங்களுக்கு அனுமதி தரவேண்டும். பாதுகாப்பு தர வேண்டும். இந்த விடயம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் அதிக கரிசனை எடுத்து விரைவில் அனுமதி வழங்க வேண்டும் என வினயமாக கேட்டுக்கொள்கிறேன்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்