கனடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோவிற்கும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் இடையில் தொலைபேசி உரையாடலொன்று நடைபெற்றுள்ளது.
இதன்போது கொரோனா தடுப்பூசி, காலநிலை மாற்றம் மற்றும் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கனடிய பிரஜைகள் தொடர்பில் ஆராயப்பட்டதாக கூறப்படுகின்றது.
அரைமணிநேரமாக நடைபெற்ற இந்த உரையாடலின்போது, அமெரிக்கா ஏற்கனவே 1.5மில்லியன் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை வழங்குவதற்கு இணங்கியுள்ள நிலையில், 205மில்லியன் தடுப்பூசியை மெக்சிக்கோவிற்கு வழங்கவுள்ளதாக பிரதமர் ரூடோவிடத்தில் அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இதேவேளை, சர்வதேச காலைநிலை மாநாடு நடைபெறவுள்ள நிலையில் அதில் முன்மொழியப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதோடு, சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கனடிய பிரஜைகள் இருவர் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது என்று கனடிய பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதேவேளை, வெள்ளை மாளிகையின் அறிக்கையில், இவ்விடயங்களுக்கு மேலதிகமாக, பொதுசுகாதார மற்றும் சர்வதேச சுகாதார பாதுகாப்பு ஆகிய விடயங்களில் ஒன்றிணைந்து பணியாற்றுவது பற்றி ஆராயப்பட்டதாகவும், மேலதிக கொரோனா பாதுகாப்பு உதவிகளை பகிர்ந்து கொள்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது